Sunday, 10 June 2012

Alibaba 40 theives Episode 3

பானுமதி சாரங்கபாணியைப் பார்த்துத் திட்டி தலைவரின் வீட்டில் இருக்க முடியாது என்று வெளியே போக முயற்சிப்பார் சாரங்கபாணி அதைப் பற்றி அலுத்துக் கொள்ளும் போது தலைவர் வேகமாக சிரிப்பார். விரலை நீட்டிப் பேசுவார்.

பச்சோந்திக்கு அடிக்கடி நிறம் மாறும்... இந்தப் பெண்களுக்கு அடிக்கடி மனநிலை மாறும் என்று வேறு சொல்லி சிரிப்பார். பானுமதிககு கோபம் அதிகமாகி திட்டுவார்.

இந்தக் காட்சியில் பானுமதியின் கோபத்தையும் பேச்சையும் சிறு குழந்தைக்கு வரும் கோபத்தை ரசிப்பதுபோல சிரித்துக் கொண்டே ரசித்தப்படி இருப்பார்.

மார்ஜியானா... நீ எதைச் சொல்கிறாய்? என்று தலைவர் கவலையோடு கேட்பது மட்டும் தான் நமக்குத் தெரியும் அவருடைய முகம் தெரியாது. அந்தக் குரலே நடிப்பின் உச்சத்தை எட்டும்.

திரும்பவும் பானுமதி போகத் திரும்பும்போது என்னண்ணா இது? என்று கேட்டப்படி தங்கை ஆயேஷா வருகிறாள். படிக்கட்டில் இறங்கிவரும் ஆயேஷாவைத் தலைவர் திரும்பிப் பார்ப்பார்.

அந்தத் திரும்பி பார்ப்பதும் மிகவும் இயல்பானதாக இருக்கும். தங்கை இறங்கி வரும்போது தலைவரின் பார்வையும் மேலிருந்து கீழாக இறங்கும். அந்தப் பார்வையில் பாசமும் அன்பும் மிகுந்து காணப்படும்.

யாரண்ணா இவள்? என்று தங்கை கேட்கும்போது தலைவர் பானுமதியை அறிமுகப்படுத்தும் போது அதில் உண்மையான பாராட்டு இருக்கும்.

ஆடலரசி மார்ஜியானா... அரேபியாவின் அழகுராணி என்னும் போது தங்கை இடைமறித்து, அழகியை இந்த நாட்டில் சிறைபிடித்து விடுவார்களே... இவர்கள் எப்படி தப்பித்தார்கள்? என்று பதறிக் கேட்பாள்.

தலைவர், மாளிகையின் பல்லிளிப்புக்கு இந்த மாணிக்கம் மசியவில்லை அமீர் காசீம்கானின் ஆட்கள் நிறைய மெகராக்கள் கொடுத்தார்கள் இவளை மயக்க. மறுத்தாள். காசீம் கானுக்கு பணத்துக்குப்பின் பலாத்காரம் தானே ஆயுதம்? அதையும் ஷேர்கான் பிரயோகித்தான்... அப்போது...? என்று சொன்னத் தலைவரை தங்கை நிறுத்தி...

ஏழைகளின் துணைவன் அலிபாபா வந்தான். எடுத்தான் வாளை... உடனே சண்டை நடந்தது முடிந்ததையும் பானுமதியும் சாரங்கபாணியும் வீட்டிற்குள் வந்ததை சொல்லி சிரிக்கிறார்கள்.

பானுமதியை ஷேர்கான தொல்லை செய்ததைப் பற்றி பேசும்போது கைகளை ஆட்டியும், முகத்தை சுருக்கியும் நடந்து கொண்டே இருப்பார். கோபத்தையும் வெளிப்படுத்தும் குரல்... சொல்லும் விஷயத்தை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லும் போது பார்க்கும் போது நாமும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தது போலவே இருக்கும்.

பானுமதியைத் தங்கள் வீட்டில் தங்க வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு தங்கை கேட்கும் போது, தங்கையின் வார்த்தையை இதுவரை தட்டி நடந்ததுண்டா அலிபாபா? ஆனால் மார்ஜியானா... என்று இழுப்பார்.

பானுமதிக்கும் தனக்கும் இடையில் நடந்த எதையும் தங்கையிடம் காட்டிக் கொள்ளாத நல்ல குணமும் கண்ணியமான நடத்தையும் வெளிப்படும். பானுமதி அங்கே தங்க சம்மதம் சொன்னதும் அவரிடம் நேரடியாக எதுவும் பேசாமல் தன் மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தி தலையை அசைத்து விட்டு ஓடுவார். பானுமதி மீது தனக்கு இருக்கும் அன்பை, காதலை தன் செய்கையால் வெளிப்படுத்துவதாக இந்தக் காட்சி அமைந்திருக்கும்.

தலைவர் போனதும் பானுமதியும் ஆயேஷாவும் தங்களின் வாழ்க்கையைப் பற்றி பேசி வருத்தப்படுகிறார்கள். காசீம்கானின் அரண்மனையில் ஷேர்கான், தன்னுடைய தவறான நடத்தையையும் தான் உதை வாங்கி அவமானப்பட்டதையும் சொல்லாமல் மறைத்து அலிபாபாவைப் பற்றி தவறாகக் சொல்லுகிறான். காசீம்கானின் மனைவி சலீமா அலிபாபாவை கைது செய்ய உத்தரவிட்டு அனுப்புகிறாள். காசீம்கான் அதைப் பற்றி கவலைப்படாமல் பணத்தை எண்ணப் போய் விடுகிறான்.

அலிபாபா வீட்டில் மார்ஜியானா சமைத்து உணவு பரிமாறுகிறாள். பானுமதியைப் பார்க்கும் தலைவரின் கண்களிலும் முகத்திலும் காதலும் பாசமும் ததும்பும் பானுமதியின் சமையலை தலைவர் பாராட்டிப் பேசுவார்.

ஆயேஷா நான் மட்டும் பணக்காரனாக இருந்தேன்... சமையல் செய்த இந்தக் கைகளுக்கு வைர வளையல் வாங்கிப்போடுவேன் என்று தலைவர் சொல்லுவார். இளமையும் காதலும் துள்ளித் ததும்பும் காட்சி இது... அதோடு வசனங்களும் பாவங்களும் காதலை அற்புதமாக வெளிப்படுத்தும் காட்சியாகவும் இது இருக்கும்.

பானுமதியின் கையை எட்டிப்பிடிப்பதும் பானுமதி வெட்கப்படுவதும் மிகவும் இயற்கையாக இருக்கும். அதைப் போலவே பானுமதியிடம் தன்னைப் பார்க்கும் போது அவருக்கு என்ன தோன்றுகிறது என்று தலைவர் கேட்பார். அதற்கு பானுமதி ஒரு தாடி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார். தலைவர் அவரை குறும்புக்காரி என்று பதிலுக்கு சொல்லி சிரிப்பார்.

இந்த மிகமிக அழகானக் காட்சியை விவரித்து எழுத முடியவில்லை. அதற்கான வார்த்தைகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. படத்தில் கண்டு ரசித்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய அபூர்வமான காட்சி இது.

இப்படிப் பட்ட காட்சிகளை குடும்பத்தோடுப் பார்க்கும்போது கூட சங்கடம் ஏற்படாது. தலைவரின் படங்களுக்கே உரிய தனித்தன்மை அவரை நம்முடைய குடும்பத்தில் ஒருவராக இணைத்துக் கொள்ள முடிந்தது.

தவுலத்தும் அலிபாபா வீட்டில் வேலை செய்யும் புல்புல்லும் பாடிக் கொண்டிக்கும் போது பானுமதி தவுலத்தைக் கூப்பிடுகிறார். தலைவர் விறகு வெட்டப் புறப்படுகிறதால் தவுலத்தை உடன்போகச் சொல்லுகிறார். தவுலத் மறுத்துப் பேசும் போது பானுமதி சொல்வார். வாள் பிடிச்ச கை கோடாலி பிடிச்சிக்கு நீயும்போ... என்று சொல்லுவார். தவுலத் புலம்பிக் கொண்டே கிளம்புவார். தலைவர் பானுமதியிடம் விடை பெற்று வந்து தவுலத்தைப் பார்த்து சரி.. சரி.. வா.. வா..என்று கழுதைகளுடன் கிளம்புகிறார்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் வசனங்கள் குறைவு. வளவளவென செயற்கைத்தனமான பேச்சுகள் இல்லை. அன்றாடம் நாம் பேசும் பேச்சையே கேட்பது போல இருக்கும். படம் முழுவதும் தலைவரின் முகத்தில் சிரிப்பு பளீரிடும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அவரைப் பார்க்கும் போதே நமக்கு அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். படம் முழுவதும் ஒரே ஒரு அழுதை காட்சி கூட இருக்காது. காசீம் கான் செத்தபிறகு ஆயேஷா இரண்டு வினாடி அழுவதுபோல மட்டுமே காட்சி இருக்கும். அது வந்து மறைந்து ஒடிவிடும்.

இப்படிப்பட்ட ஒரு படம் இனி வருமா என்பது சந்தேகம்தான். அதனால்தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தை பார்க்கும்போது என்றென்றும் மகிழ்ச்சி பூவாணமாய் சிதறுகிறது.



தொடரும்.

குறிப்பு - கமெண்ட் மூலம் என் முயற்சியை வாழ்த்தியவர்களுக்கு என் நன்றிகள்.

Saturday, 5 May 2012

Alibaba 40 theives Episode 2

தலைவரின் எந்த வார்த்தைகளையும் காதில் வாங்காத ஷேர்கான், பானுமதியை அழைத்து செல்வதிலேயே குறியாக இருப்பான், பானுமதியை வேலி இல்லாத ரோஜா என்றும் ஏளனம் செய்வான்.

தலைவர் உடனே சொல்வார் வேலியில்லாவிட்டாலும் ரோஜாவைப் பாதுகாக்க முட்கள் இருப்பது உனக்குத் தெரியாதா? இதோ பார் முள்படுத்தும் பாட்டை, என்ற கூறிவிட்டு ஷேர்கானைத் தள்ளிவிடுவார். கோபம் கொண்ட ஷேர்கானின் ஆட்கள் சண்டை போடு வருவார்கள்.

அவர்களோடு கத்திக் சண்டை போடும் போது வாள் வீசும் லாவகத்தைப பார்த்து வியப்பதா... இல்லை மின்லைப் போல பாயும்  வேகத்தை வியப்பதா... இல்லை ஓரிடம் நில்லாமல் துள்ளிக் குதித்துக் ஓடும் சுறுசுறுப்பை ரசிப்பதா... படம் பார்க்கும் ரசிகனுக்கும் ஒரே குழப்பமாகிவிடும். அப்படி ஒரு அருமையான சண்டைக்காட்சி அது. அத்தனை சண்டையிலும் முகம் மாறாமல் சிரித்துக் கொண்டே தலைவர் சண்டை போடும் அழகை ரசிக்காதவனோ... பாராட்டாதவனோ... மனிதன் இல்லை.

ஷேர்கான் நன்றாக உதை வாங்கிக் கொண்டு ஒருவழியாக தப்பித்து ஒடுவான். அவன் பின்னே தலைவர் துரத்திக் கொண்டே ஒடி வருவார். ஷேர்கான் கீழே விழுந்து விடுவான். வேண்டும் என்றே அவன் முகத்தருகே வாளின் முனையை வைத்து ஆட்டுவார். ஷேர்கான் உயிர் பயத்தில் தவிப்பான்.

அபோதும் சிரிப்புடன்தான் தலைவரின் முகம் இருக்கும். ஷேர்கானைப் பார்த்து, இருப்பவன் பயந்து சாவான் இல்லாதவன் துணிந்து சாவான். நான் சாகும் வரை உங்கள் ஈனச் செயலுக்கு தடை இருந்து கொண்டேதான் இருக்கும்.. என்று சொல்விட்டு விரலை ஆட்டி எச்சரிக்கை செய்வார். இபோது முகம் மாறுவதை பார்க்கவேண்டுமே.. சிவந்தமுகம் மேலும் சிவப்பது நன்றாகத் தெரியும். ஷேர்கான் பயந்தே போவான். ஷேர்கானின் கத்தியை அவன் மீது எறிந்து விட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு மகாராஜா போல நிற்பார். அதைக்காணவே கண் கோடி வேண்டும்.

அப்போது ஊர் பெரியவர் ஒருவர் தலைவரை வாழ்த்துவார். காசீம்கானின் ஆட்கள் செய்யும் அட்டகாசத்தையும் அநியாயத்தையும் தட்டிக் கேட்கும் குணத்தையும் பாராட்டுவார்.

அதற்குத் தலைவர் நன்றி சொல்லுவார். அப்போது பணிவுடன் கையை நீட்டிக்குனிந்து நன்றி பிரதிபலிக்கும் முகத்தோடு சலாம் சொல்லுவார். அந்த அடக்கமும் பணிவும் பார்க்கப் பார்க்கத் திகட்டாத ஒன்று.

அதன் பிறகு தான் அருகில் இருக்கும் பானுமதி இருப்பதே அவருக்கு நினைவுக்கு வரும்.

திரும்பி பானுமதியைப் பார்ப்பார். அழகான புன்னகையோடு பானுமதியைப் பார்க்கும் போது அவருடைய அழகான முகத்தில் எந்தவித விரசமும் இல்லாத கண்ணியமான பார்வையாக இருக்கும், அழகை ரசிக்கும் ஒரு ரசிகனின் பார்வையாக மட்டுமே அது இருக்கும்.

அழகான ஒரு பெண்ணைப் பார்த்ததும் பல்லிளித்து விட்டுப்போகும் பார்வை அல்ல அது பொதுவாக இப்படி பார்வையில் நடிக்கும் போது கத்தி மீது நடக்கும் நிலைதான் மனதிலிருப்பதை கண்கள் பிரதிபலித்து விடும். அலிபாபாவின் மனதில் அந்தப் பேரழகியைக் கண்டும் எந்தவிதமான வேண்டாத நினைவுகளும் இல்லை என்பதே காட்சி. அதை தலைவர் நடிப்பில் வெளிப்படுத்தும் விதமோ அற்புதமான ஒன்று என்பதே ரசிகனின் முடிவு. நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராலும் இந்த மிக மென்மையான காட்சிக்கு இத்தனை அழகாக உயிரூட்டி நடிக்க முடியாது என்பதே உண்மை.

பானுமதியைப் பார்த்தது அழகை ரசிக்கும் நிலைதான் என்பதை அடுத்த விநாடியில் வெளிப்படுத்துவார். அவரோடு எதுவும் பேசாமல் தன் வழியே ஓடுவார். போகும் போது கையிலிருக்கும் பழத்தை அங்கே வழியில் உட்கார்ந்திருக்கும் பையனிடம் தூக்கிப்போடுவார். எந்தக் கவலையுமில்லாத மனிதனாகத் தன் வழியே போய்க் கொண்டிருப்பார்.

பானுமதியும் சாரங்கபாணியும் ஓடிவந்து தங்கள் நன்றியை அவருக்குத் தெரிவிப்பார்கள். உடனே தலைவர் சொல்லுவார் என கடமையைத் தானே செய்தேன்...

இந்த வசனம் தலைவருக்காகவே உருவாக்கப் பட்டது என்று சொன்னால் அது மிகையல்ல ஏறக்குறைய அவருடைய எல்லாப் படங்களிலும் இந்த வசனம் வந்தே தீரும். ஏனென்றால் தலைவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாமே கடமை வீரனாக வருபவைதான். இந்த அற்புதமான வசனத்தை முதன் முதலில் அவருக்கு எழுதிய அந்த வசனகர்த்தா பெருமகனுக்கு எங்களுடைய வணக்கங்கள்...

பானுமதி அவரைப் புகழ் என்று இழுக்கும் போதும், வார்த்தைகளைத் தேட வேண்டாம். என்னைப் புகழ்ந்ததாகவே நினைத்துக் கொள்ளுகிறேன். என்று சொல்லிவிட்டு படியேறி பாலத்தின் மீது நடப்பார். மீண்டும் பானுமதியும் சாரங்கப்பாணியும் விடாமல் பின்னால் ஒடிவருவார்கள்.. வேறு வழியில்லாமல் நிற்பார்.

எனக்குப் அதிகமாகப் பேசி பழக்கமில்லை வருகிறேன்... என்று போக முற்படுகிறபோது பானுமதி தனக்கு தலைவரின் வீட்டில் அடைக்கலம் தர முடியுமா என்று கேட்கிறார். உடனே தலைவர்.

எனக்குப் பெண்களைக் கண்டாலே பிடிக்காது... அதிலும் ஆண்களை அடக்கி ஆளும் இந்தக் கண்களைத் கண்டாலே எனக்கு ரொம்ப் பயம்... நான் வரட்டுமா? என்று கூறிவிட்டு வேகமாக பாலத்தின் மறுபுற படிக்கட்டில் இறங்கிப் போய் வீட்டுக்கதவைத் தட்டுவார். கதவை திறந்து ஒரு பெண் வருவாள். அவளை அணைத்துக் கொண்டு தலைவர் உள்ளே போய்விடுவார்.

பானுமதி தலைவர் மீது கடும் கோபம் கொண்டு ஏசிப் பேசுவார். வீட்டிலிருந்து வெளியே வந்தவள் தலைவரின் மனைவியாக இருக்கவேண்டும் என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும் போது பாலத்தின் அடியில் ஷேர்கான் தன் ஆட்களோடு வருவான். சாரங்கபாணி பதறிய படி பானுமதியை இழுத்துக் கொண்டு தலைவரின் வீட்டுக் கதவைத் தட்டுவார். தலைவர் மீது கோபத்தில் இருக்கும் பானுமதி வர மறுத்து முரண்டு பிடிப்பார். ஆனால் தலைவர் கதவைத் திறந்ததும் சாரங்கபாணி பானுமதியை உள்ளே தள்ளுவார்.

தன்மீது வேகமாக விழும் பானுமதியைத் தலைவர் பிடிப்பார். பானுமதி கையை உதறுவார். தலைவர் எதுவும் புரியாமல் தவிப்பும் குழப்பமுமாக இருவரையும் பார்ப்பார்.

இந்தக் காட்சிகளில் இரண்டு இடங்களில் சாரங்கபாணி தலைவரைப் பற்றி பேசும் வசனங்கள் மகிவும் வியப்பானவை பின்னாளில் உண்மையாகிப் போன நிஜங்கள். தலைவர் ஒரு தெய்வப் பிறவி என்பதை நமக்கு உணர்த்தும் உண்மைகள்.

ஷேர்கான் உதை வாங்கிக் கீழே விழுந்து வீதியில் கிடக்கும் போது சாரங்கபாணி சொல்வார். கீரிக்கு பாம்புண்ணா... அந்த பாம்புக்கு இந்த கருடணையும் படைச்சிருக்கார் கடவுள்... என்று தலைவரைக் காட்டுவார். தலைவருக்குப் பகைவரே கிடையாது... அப்படி அவரை பகையாக நினைத்தவர்கள் தாங்களே அழிந்து போவார்கள்... அவரை மனம் நோகடித்தவர்கள் இன்றும் என்ன வேதனையை அனுபவிக்கிறார்கள் என்பதை நம் கண் முன்னே, அனுதினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

அடுத்தாக பானுமதி வலியப்போய் பேசி அடைக்கலம் கேட்டும் போது மறுத்து விட்டுப்போகும் தலைவரைப் பார்த்து, துணியாவில் பார்க்க முடியாத ஒரு தனியான ஆள்... என்பார். இதன் பொருள் உலகத்தில் பார்க்க முடியாத ஒரு தனியான ஆள்... உண்மைதானே? இந்த உலகத்திலேயே யாராலும் அவரைப் போல இருக்க முடியாத உத்தமகுணங்கள் கொண்ட அற்புதமான மனிதர் தலைவர் மட்டும் தானே? இந்த வசனம் அவருடைய திரைப்படத்தின் பெரிய வெற்றிகளுக்குப் பின்னால் எழுதப்பட்டாதா? இல்லை அவர் முதல்வரான பிறகு எழுதப்பட்டாதா? இரண்டும் இல்லையே...

தலைவர் மனிதருள் மாணிக்கம் என்பதை அன்றே இறைவன் மற்றவர் மூலம் எழுத வைத்து விட்டான் என்பதே உண்மை... காற்றின் வேகத்தை, பொங்கிவரும் நதிப்பிரவாகத்தை கொழுந்து விட்டு எரியும் பெரு நெருப்பின் சூட்டை, விரிந்து கிடக்கும் ஆகாயத்தின் அழகை... மனிதக் கை கொண்டு மறைக்க முடியுமா - இல்லை மனித மமதை கொண்டு அழிக்க முடியுமா? இதைப் போலவே தான் தலைவரின் பெருமைகளும் இறைவனால் படைக்கப்பட்ட நிஜங்கள்...

தொடரும்.

Friday, 20 April 2012

Alibaba 40 theives Episode 1

நேரம் இல்லாத காரணத்தால் நான் எழுதி ஒலிக்கிறது உரிமைக்குரல் ஏப்ரல் 2012 இதழில் வெளியான இரண்டு பக்கத்தையும் அதன் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.

பக்கம் 1



பக்கம் 2



Friday, 6 April 2012

என் தலைவன்


இதய ஏட்டினில் அன்பென்னும் மையினால் எழுதப் பட்டது இந்த எழுத்து மடல்.

என் தலைவனின் சந்தனப் பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கும் பாசமலர் அர்ச்சனை.


புரட்சித் தலைவரின் புகழும் பெருமையும் காற்றில் அலையாது, தண்ணீரில் கரையாது, பூமிக்குள் ஓடாது, நெருப்பில் எரியாது, வானத்தில் மறையாது.

ஏனென்றால், அது பஞ்சபூதங்களையும் தனக்குள் அடக்கிய மாபெரும் சக்திக் கோளம்.

என் குழந்தைப் பருவம் அற்புதமானது.

மக்கள் திலகத்தின் படங்களை மட்டுமே திரையரங்குளில் மெய் மறந்து பார்த்து, வீரமும், விவேகமும் நிறைந்த அவரின் வசனங்களில் வாழ்க்கையைக் கற்று, கருத்தும், கண்ணியமும் இழைத்து அவர் பாடிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்து வளர்ந்தேன்.

அதனால்தான் அறிவுள்ளவளாக - மனதில் நல்லெண்ணமும் - செயலில் துணிச்சலும் தைரியமும் - குணத்தில் மாண்பும் - பண்பில் மனிதாபிமானமும் நிறைந்தவளாக எல்லோருக்கும் பிடித்தவளாக இத்ந விநாடி வரை என் வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த வலைப்வூவில் நான் எழுதுவது தலைவரின் படங்களை பற்றின விமர்சனமோ, விவரிப்போ கிடையாது, நான் பார்த்து என் கண்ணில் பட்டு கருத்தைக் கவர்ந்த பிரமிக்க வைத்த காட்சிகளின் சின்ன தொகுப்பு மட்டுமே. தலைவரின் நடிப்பு திறனை பற்றி தனி புத்தகம் எழுதுவதே எனது அடுத்த லட்சியம்.