Sunday 10 June 2012

Alibaba 40 theives Episode 3

பானுமதி சாரங்கபாணியைப் பார்த்துத் திட்டி தலைவரின் வீட்டில் இருக்க முடியாது என்று வெளியே போக முயற்சிப்பார் சாரங்கபாணி அதைப் பற்றி அலுத்துக் கொள்ளும் போது தலைவர் வேகமாக சிரிப்பார். விரலை நீட்டிப் பேசுவார்.

பச்சோந்திக்கு அடிக்கடி நிறம் மாறும்... இந்தப் பெண்களுக்கு அடிக்கடி மனநிலை மாறும் என்று வேறு சொல்லி சிரிப்பார். பானுமதிககு கோபம் அதிகமாகி திட்டுவார்.

இந்தக் காட்சியில் பானுமதியின் கோபத்தையும் பேச்சையும் சிறு குழந்தைக்கு வரும் கோபத்தை ரசிப்பதுபோல சிரித்துக் கொண்டே ரசித்தப்படி இருப்பார்.

மார்ஜியானா... நீ எதைச் சொல்கிறாய்? என்று தலைவர் கவலையோடு கேட்பது மட்டும் தான் நமக்குத் தெரியும் அவருடைய முகம் தெரியாது. அந்தக் குரலே நடிப்பின் உச்சத்தை எட்டும்.

திரும்பவும் பானுமதி போகத் திரும்பும்போது என்னண்ணா இது? என்று கேட்டப்படி தங்கை ஆயேஷா வருகிறாள். படிக்கட்டில் இறங்கிவரும் ஆயேஷாவைத் தலைவர் திரும்பிப் பார்ப்பார்.

அந்தத் திரும்பி பார்ப்பதும் மிகவும் இயல்பானதாக இருக்கும். தங்கை இறங்கி வரும்போது தலைவரின் பார்வையும் மேலிருந்து கீழாக இறங்கும். அந்தப் பார்வையில் பாசமும் அன்பும் மிகுந்து காணப்படும்.

யாரண்ணா இவள்? என்று தங்கை கேட்கும்போது தலைவர் பானுமதியை அறிமுகப்படுத்தும் போது அதில் உண்மையான பாராட்டு இருக்கும்.

ஆடலரசி மார்ஜியானா... அரேபியாவின் அழகுராணி என்னும் போது தங்கை இடைமறித்து, அழகியை இந்த நாட்டில் சிறைபிடித்து விடுவார்களே... இவர்கள் எப்படி தப்பித்தார்கள்? என்று பதறிக் கேட்பாள்.

தலைவர், மாளிகையின் பல்லிளிப்புக்கு இந்த மாணிக்கம் மசியவில்லை அமீர் காசீம்கானின் ஆட்கள் நிறைய மெகராக்கள் கொடுத்தார்கள் இவளை மயக்க. மறுத்தாள். காசீம் கானுக்கு பணத்துக்குப்பின் பலாத்காரம் தானே ஆயுதம்? அதையும் ஷேர்கான் பிரயோகித்தான்... அப்போது...? என்று சொன்னத் தலைவரை தங்கை நிறுத்தி...

ஏழைகளின் துணைவன் அலிபாபா வந்தான். எடுத்தான் வாளை... உடனே சண்டை நடந்தது முடிந்ததையும் பானுமதியும் சாரங்கபாணியும் வீட்டிற்குள் வந்ததை சொல்லி சிரிக்கிறார்கள்.

பானுமதியை ஷேர்கான தொல்லை செய்ததைப் பற்றி பேசும்போது கைகளை ஆட்டியும், முகத்தை சுருக்கியும் நடந்து கொண்டே இருப்பார். கோபத்தையும் வெளிப்படுத்தும் குரல்... சொல்லும் விஷயத்தை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லும் போது பார்க்கும் போது நாமும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தது போலவே இருக்கும்.

பானுமதியைத் தங்கள் வீட்டில் தங்க வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு தங்கை கேட்கும் போது, தங்கையின் வார்த்தையை இதுவரை தட்டி நடந்ததுண்டா அலிபாபா? ஆனால் மார்ஜியானா... என்று இழுப்பார்.

பானுமதிக்கும் தனக்கும் இடையில் நடந்த எதையும் தங்கையிடம் காட்டிக் கொள்ளாத நல்ல குணமும் கண்ணியமான நடத்தையும் வெளிப்படும். பானுமதி அங்கே தங்க சம்மதம் சொன்னதும் அவரிடம் நேரடியாக எதுவும் பேசாமல் தன் மகிழ்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தி தலையை அசைத்து விட்டு ஓடுவார். பானுமதி மீது தனக்கு இருக்கும் அன்பை, காதலை தன் செய்கையால் வெளிப்படுத்துவதாக இந்தக் காட்சி அமைந்திருக்கும்.

தலைவர் போனதும் பானுமதியும் ஆயேஷாவும் தங்களின் வாழ்க்கையைப் பற்றி பேசி வருத்தப்படுகிறார்கள். காசீம்கானின் அரண்மனையில் ஷேர்கான், தன்னுடைய தவறான நடத்தையையும் தான் உதை வாங்கி அவமானப்பட்டதையும் சொல்லாமல் மறைத்து அலிபாபாவைப் பற்றி தவறாகக் சொல்லுகிறான். காசீம்கானின் மனைவி சலீமா அலிபாபாவை கைது செய்ய உத்தரவிட்டு அனுப்புகிறாள். காசீம்கான் அதைப் பற்றி கவலைப்படாமல் பணத்தை எண்ணப் போய் விடுகிறான்.

அலிபாபா வீட்டில் மார்ஜியானா சமைத்து உணவு பரிமாறுகிறாள். பானுமதியைப் பார்க்கும் தலைவரின் கண்களிலும் முகத்திலும் காதலும் பாசமும் ததும்பும் பானுமதியின் சமையலை தலைவர் பாராட்டிப் பேசுவார்.

ஆயேஷா நான் மட்டும் பணக்காரனாக இருந்தேன்... சமையல் செய்த இந்தக் கைகளுக்கு வைர வளையல் வாங்கிப்போடுவேன் என்று தலைவர் சொல்லுவார். இளமையும் காதலும் துள்ளித் ததும்பும் காட்சி இது... அதோடு வசனங்களும் பாவங்களும் காதலை அற்புதமாக வெளிப்படுத்தும் காட்சியாகவும் இது இருக்கும்.

பானுமதியின் கையை எட்டிப்பிடிப்பதும் பானுமதி வெட்கப்படுவதும் மிகவும் இயற்கையாக இருக்கும். அதைப் போலவே பானுமதியிடம் தன்னைப் பார்க்கும் போது அவருக்கு என்ன தோன்றுகிறது என்று தலைவர் கேட்பார். அதற்கு பானுமதி ஒரு தாடி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார். தலைவர் அவரை குறும்புக்காரி என்று பதிலுக்கு சொல்லி சிரிப்பார்.

இந்த மிகமிக அழகானக் காட்சியை விவரித்து எழுத முடியவில்லை. அதற்கான வார்த்தைகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. படத்தில் கண்டு ரசித்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய அபூர்வமான காட்சி இது.

இப்படிப் பட்ட காட்சிகளை குடும்பத்தோடுப் பார்க்கும்போது கூட சங்கடம் ஏற்படாது. தலைவரின் படங்களுக்கே உரிய தனித்தன்மை அவரை நம்முடைய குடும்பத்தில் ஒருவராக இணைத்துக் கொள்ள முடிந்தது.

தவுலத்தும் அலிபாபா வீட்டில் வேலை செய்யும் புல்புல்லும் பாடிக் கொண்டிக்கும் போது பானுமதி தவுலத்தைக் கூப்பிடுகிறார். தலைவர் விறகு வெட்டப் புறப்படுகிறதால் தவுலத்தை உடன்போகச் சொல்லுகிறார். தவுலத் மறுத்துப் பேசும் போது பானுமதி சொல்வார். வாள் பிடிச்ச கை கோடாலி பிடிச்சிக்கு நீயும்போ... என்று சொல்லுவார். தவுலத் புலம்பிக் கொண்டே கிளம்புவார். தலைவர் பானுமதியிடம் விடை பெற்று வந்து தவுலத்தைப் பார்த்து சரி.. சரி.. வா.. வா..என்று கழுதைகளுடன் கிளம்புகிறார்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் வசனங்கள் குறைவு. வளவளவென செயற்கைத்தனமான பேச்சுகள் இல்லை. அன்றாடம் நாம் பேசும் பேச்சையே கேட்பது போல இருக்கும். படம் முழுவதும் தலைவரின் முகத்தில் சிரிப்பு பளீரிடும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அவரைப் பார்க்கும் போதே நமக்கு அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். படம் முழுவதும் ஒரே ஒரு அழுதை காட்சி கூட இருக்காது. காசீம் கான் செத்தபிறகு ஆயேஷா இரண்டு வினாடி அழுவதுபோல மட்டுமே காட்சி இருக்கும். அது வந்து மறைந்து ஒடிவிடும்.

இப்படிப்பட்ட ஒரு படம் இனி வருமா என்பது சந்தேகம்தான். அதனால்தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தை பார்க்கும்போது என்றென்றும் மகிழ்ச்சி பூவாணமாய் சிதறுகிறது.



தொடரும்.

குறிப்பு - கமெண்ட் மூலம் என் முயற்சியை வாழ்த்தியவர்களுக்கு என் நன்றிகள்.

No comments: